கோலாலம்பூர்: 

தைப்பூசத் திருவிழா எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் தேதி மலேசியாவில் உள்ள இந்து பெருமக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. 

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சு இவ்வருடம் மீண்டும் கெசுமா மடானி முன்னெடுப்பு திட்டத்தை நடத்துகிறது.

கடந்தாண்டு பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திலும் பினாங்கு பாலதண்டாயுதபானி ஆலயத்திலும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து 2025ஆம் ஆண்டு மீண்டும் கெசுமா மடானி திட்டம் அமல்படுத்துவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

இதன் அடிப்படையில் கெசுமா மடானி மூலமாக பல்வேறான வசதிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சொன்னார். அதில் முதலாவதாக, சிறப்பு ஓய்வெடுக்கும் பகுதி அமைக்கப்படும். இதனால் இரு ஆலயங்களுக்கும்வரும் பக்தர்கள் இந்த சிறப்பு ஓய்வெடுக்கும் பகுதியில் ஓய்வெடுக்கலாம். பத்துமலையில் 700 பேரும் தண்ணீர்மலையில் 500 பேரும் ஓய்வெடுக்கும் பகுதி தயார் செய்யப்படவுள்ளது 

தொடர்ந்து, வீரா கெசுமா எனும் தன்னார்வ அடிப்படையிலான திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளது. கிட்டத்தட்ட 300 தன்னார்வ நபர்கள் பக்தர்களுக்கு உதவிகளை வழங்குவார்கள் என்று அமைச்சர் சொனனர். 

அதுமட்டுமல்லாமல்,  இரு ஆலயங்களிலும் இலவச சுகாதார பரிசோதனை, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், வேலையிட பாதுகாப்பு திட்டம் தொடர்பாக விளக்கக்கூட்டம், தொழிற்திறன் வாய்ப்புகள் குறித்த முகப்புகள் ஆகியவை தயார் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார் 
இவ்வருடம் கூடுதலாக குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை ஒன்றை தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார் .

ஆக, தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் யாவரும் இந்த கெசுமா மடானி முன்னெடுப்பு திட்டத்தில் செய்துள்ள வசதிகளையும் வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுகொண்டார் 

முன்னதாக, நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் ஸ்டீவன் சிம் கலந்து கொண்டு இவ்விவரங்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன்